நாட்டில் பள்ளி படிப்பை கைவிட்டோர் 12.53 லட்சம்; தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்...?


நாட்டில் பள்ளி படிப்பை கைவிட்டோர் 12.53 லட்சம்; தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்...?
x

நாடு முழுவதும் பள்ளி படிப்பை கைவிட்ட மாணவ மாணவியர்கள் எண்ணிக்கை 12.53 லட்சம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,


நாடாளுமன்ற மேலவையில் உறுப்பினர்கள் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மற்றும் ஏ.ஏ. ரகீம் ஆகியோர் நாட்டில் பள்ளி படிப்பை கைவிட்ட மாணவ மாணவியர்கள் எண்ணிக்கை பற்றி எழுப்பிய கேள்வி ஒன்றிக்கு மத்திய கல்வி இணை மந்திரி சுபாஷ் சர்க்கார் எழுத்துவழியே பதில் அளித்து உள்ளார்.

அதில், நாடு முழுவதும் பள்ளி படிப்பை கைவிட்ட மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 12.53 லட்சம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் மாணவர்கள் 6.97 லட்சம். மாணவிகள் 6.22 லட்சம் ஆவர். இதில், 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 9.30 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் மாணவர்கள் எண்ணிக்கை 5.02 லட்சம். மாணவிகள் எண்ணிக்கை 4.27 லட்சம் ஆவர். மாற்று பாலின மாணவர்களின் எண்ணிக்கை 32 ஆகும்.

இந்த பட்டியலில் உத்தர பிரதேசம் (3.96 லட்சம்), பீகார் (1.34 லட்சம்), குஜராத் (1.06 லட்சம்), அசாம் (80,739), அரியானா (22,841) மற்றும் தமிழகம் (20,352) உள்ளன. இந்த வரிசையில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது.

14 வயதுக்கு மேற்பட்ட 3.22 லட்சம் மாணவர்கள் பள்ளி படிப்பை கைவிட்டு உள்ளனர். அவர்களில் 1,94,350 மாணவர்களும், 1,28,126 மாணவிகளும் மற்றும் 12 மாற்று பாலினத்தவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், மாணவிகளை விட மாணவர்களே பள்ளி படிப்பை அதிக அளவில் கைவிட்டு உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.

2021-22-ம் ஆண்டில், சமூக மற்றும் பொருளாதார அளவில் பாதித்த 16 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்களுக்கு உதவிடும் வகையில் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. படிப்பை நிறைவு செய்ய மற்றும் படிப்புக்கான பொருட்கள் மற்றும் சான்றிதழ்களை பெற உதவிடும் வகையில் இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது என்றும் அவையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story