மைசூருவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது
மைசூருவில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 12 பேர் கைது செய்த போலீசார், ரூ.64 ஆயிரம் ரொக்கம், 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.
மைசூரு:
மைசூரு டவுனில் கடந்த சில நாட்களாக காசு வைத்து சூதாட்டம் நடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சூதாட்டத்ைத தடுக்க போலீசார் மைசூரு டவுன் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று மைசூரு டவுன் அரவிந்த் நகர் பகுதியில் காசு வைத்து சூதாட்டம் நடப்பதாக குவெம்பு நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் காசு வைத்து சூதாட்டம் நடப்பது தெரியவந்தது. அந்த வீட்டில் போலீசார் சோதனை செய்ய சென்றபோது அங்கு இருந்த 12 பேர் தப்பியோடினர். அவர்களை போலீசார் துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அதேப்பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.64 ஆயிரத்து 680 மற்றும் 10 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.