சித்ரதுர்காவில் ரசாயனம் கலந்த 12 விநாயகர் சிலைகள் பறிமுதல்


சித்ரதுர்காவில்  ரசாயனம் கலந்த 12 விநாயகர் சிலைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்காவில் ரசாயனம் கலந்த 12 விநாயகர் சிலைகளை நகரசபை கமிஷனர் பறிமுதல் செய்தார்.

சித்ரதுர்கா-

சித்ரதுர்காவில் ரசாயனம் கலந்த 12 விநாயகர் சிலைகளை நகரசபை கமிஷனர் பறிமுதல் செய்தார்.

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை கர்நாடகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்தநிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும், மீலாது நபி பண்டிகையும் ஒரே நாளில் வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடக மாநிலம் முழுவதும் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். இந்தநிலையில் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்யக்கூடாது என கர்நாடக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி ஒரு சில இடங்களில் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் விற்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் சித்ரதுர்கா ஐயப்பன் பேட்டை பகுதியில் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் விற்பனை செய்வதாக சித்ரதுர்கா நகரசபைக்கு புகார் வந்தது.

சோதனை

அதன்பேரில் சித்ரதுர்கா நகரசபை கமிஷனர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அதில் 12 விநாயகர் சிலைகள் ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நகரசபை கமிஷனர் 12 விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்தார். பின்னர் அதனை சரக்கு வாகனத்தி்ல் ஏற்றி நகரசபைக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து நகரசபை கமிஷனர் ரேணுகா கூறுகையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். பண்டிகையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட கூடாது. மேலும், வீடு, பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபடுவார்கள்.

நடவடிக்கை

இந்தநிலையில் சித்ரதுர்கா டவுன் பகுதியில் ஒரு சில இடங்களில் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது. அதனை மக்கள் வாங்க வேண்டாம். ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் தண்ணீரில் கரையாது. இதனால் நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் செத்துவிடும். மேலும் தண்ணீர் மாசுபடுதல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.

எனவே ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story