கேதார்நாத் கோவிலுக்கு கடந்த 126 நாட்களில் 11 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்து சாதனை!
இதற்கு முன் அதிகபட்சமாக 2019ம் ஆண்டில், 10 லட்சம் பக்தர்கள் வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேராடூன்,
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலமான கேதார்நாத் கோவிலுக்கு கடந்த 126 நாட்களில் 11 லட்சம் பக்தர்கள் வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பு அறிக்கைபடி, இதற்கு முன் அதிகபட்சமாக 2019ம் ஆண்டில், 10 லட்சம் பக்தர்கள் வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சாதனை இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக யாத்திரை பாதிக்கப்பட்டது, ஆனால் இந்த முறை யாத்திரை முறையாக நடத்தப்படுகிறது.
ஆரம்ப கட்டத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சனைகள் ஏற்பட்டன. தூய்மை அமைப்பிலும் சில குறைபாடுகள் காணப்பட்டன. அனைத்து ஏற்பாடுகளும் சரி செய்யப்பட்டுள்ளன. ஐநூறுக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் ருத்ரபிரயாக் முதல் கேதார்நாத் வரை தங்கள் சேவைகளை வழங்கி வருகின்றனர்.
கேதர்நாத் பயணத்தில் பிரச்னை ஏற்படக்கூடாது என அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை இங்கு பல பயணிகள் வந்துள்ளனர், மேலும் கேதர்நாத் யாத்திரை நிறைவடைய இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அனைத்து ஓட்டல் மற்றும் லாட்ஜ்களும் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறினார்.
கேதர்நாத் யாத்திரை நிறைவடைய இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு, கேதார்நாத் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.