11-ந்தேதிக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முடிவு: ஏக்நாத் ஷிண்டே


11-ந்தேதிக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முடிவு: ஏக்நாத் ஷிண்டே
x

கோப்புப்படம் 

சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியினரால் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

மும்பை,

சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியினரால் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த 30-ந்தேதி முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும் பதவி ஏற்றனர்.

இந்த நிலையில் புதிய அரசின் மந்திரி சபை எப்போது விரிவாக்கம் செய்யப்படும் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்த நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், "மந்திரி சபை விரிவாக்கம் விரைவில் செய்யப்படும். மந்திரிகள் இலாகா பங்கீடு குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.

இதேபோல முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும் மந்திரி இலாகா ஒதுக்கீடு குறித்து விவாதிக்க சிறிது நேரம் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- முதலில் நாங்கள் சரியாக சுவாசிக்க முயற்சிக்கிறோம். மாநில அரசில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றங்கள் எங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருந்தது. நானும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் அமர்ந்து இலாகாக்கள் ஒதுக்கீடு குறித்து விவாதிப்போம். பா.ஜனதாவின் தேசிய தலைவர்களிடம் இருந்தும் இதுகுறித்து ஆலோசனைகளை பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் அதிருப்தி அணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீசு அனுப்பியது தொடர்பான வழக்கு, சிவசேனா கட்சியின் கொறடாவை மாற்றிய சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ஆகியவை வருகிற 11-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என அரசு வட்டாரங்களின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.


Next Story