இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் உட்பட 105 பேர் மீட்பு!
இமாச்சலப் பிரதேசத்தின் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக சத்ரு மற்றும் டோர்னி மோர் பகுதியில் நேற்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
சிம்லா,
இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக சத்ரு மற்றும் டோர்னி மோர் பகுதியில் நேற்று (ஜூலை 31) திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த இரண்டு பகுதிகளிலும் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டுள்ளனர்.
இதுகுறித்து லாஹவுல்-ஸ்பிடி போலீசாருக்கு நள்ளிரவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட போலீசார், மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் சம்பவயிடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் சத்ருவில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் சிவில் நிர்வாகத்தின் கூட்டு மீட்பு நடவடிக்கையில் சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 105 பேர் மீட்கப்பட்டனர்.
முதல்கட்ட தகவலில், சத்ரு மற்றும் டோர்னி மோர் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கான சாலைகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிக்கான படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கீலாங் வட்டாட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் நேரில் கண்காணித்துவருகின்றனர்