நாடு வளர்ச்சி காண 10 ஆயிரம் அம்பானி, அதானிகள் தேவை: ஜி20 இந்திய குழு தலைவர் பேச்சு


நாடு வளர்ச்சி காண 10 ஆயிரம் அம்பானி, அதானிகள் தேவை:  ஜி20 இந்திய குழு தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 9 Nov 2022 10:51 AM IST (Updated: 9 Nov 2022 10:59 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் வளர்ச்சிக்கு 10 ஆயிரம் அம்பானிகள், 20 ஆயிரம் அதானிகள் தேவை என ஜி20 இந்திய குழு தலைவர் பேசியுள்ளார்.



புதுடெல்லி,


ஜி-20 என்னும் அமைப்பில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இடம் பெற்றுள்ளன.

இந்த அமைப்பின் நாடுகள் மொத்தமாய் உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 85 சதவீத பங்கு வகிக்கின்றன. உலக வர்த்தகத்தில் 75 சதவீதம் பங்காற்றி வருகின்றன. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கை கொண்டிருக்கின்றன. இந்த அமைப்புக்கு அடுத்த மாதம் 1-ந்தேதி இந்தியா தலைமை ஏற்க இருக்கிறது.

இந்தோனேசியாவிடம் இருந்து இந்த தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வருகிறது. இதனையொட்டி காணொலிக்காட்சி வழியாக நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ஜி-20 அமைப்பின் சின்னம், கருப்பொருள், இணையதளம் ஆகியவற்றை நேற்று தொடங்கி வைத்து பேசினார்.

இதனையொட்டி, புதுடெல்லியில் ஜி20 அமைப்புக்கான இந்திய குழுவின் தலைவர் மற்றும் நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் கந்த், தொழிலதிபர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் முன் பேசினார்.

அவர் அப்போது பேசும்போது, ஜி-20 அமைப்புக்கு தலைமை தாங்கும் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்திருப்பதன் மூலம், பல்வேறு தரப்பு வர்த்தகர்களுடன் உரையாடுவதற்கான பெரிய சந்தர்ப்பம் வாய்த்து உள்ளது.

அதனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் உங்களது துறை சார்ந்த தொழில்களில் இன்னும் பெரிய அளவில் வரவேண்டும். இந்த சந்தர்ப்பம் மீண்டும் உங்களுக்கு ஒருபோதும் வராது என அவர் கூறியுள்ளார்.

உலகளாவிய சவாலான சூழலில் ஜி20 தலைமைத்துவம் இந்தியாவுக்கு கிடைத்து உள்ளது. இதில், நாட்டின் திறமையான செயல்பாடானது, ஒவ்வொரு சவாலையும் வாய்ப்பாக மாற்ற முடியும்.

அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா 9 முதல் 10 சதவீத வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், நீங்கள் அனைவரும் ஆண்டுக்கு 30 முதல் 40 சதவீத வளர்ச்சி அடைய வேண்டும். இதுவே இந்தியாவுக்கான சவால்.

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களது (தனியார் துறை) வளர்ச்சி மற்றும் வளம் இன்றி இந்தியா வளமடையாது. நாட்டுக்கு ஓர் அம்பானி மற்றும் அதானி மட்டும் இருப்பது, போதியது இல்லை. 10 ஆயிரம் அம்பானிகள், 20 ஆயிரம் அதானிகள் வேண்டும். அதன்பின்னரே இந்தியா வளர்ச்சி அடையும் என அவர் கூறியுள்ளார்.




Next Story