இந்தியாவில் 100 ஜி-20 மாநாடுகள்; 111 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரம் குழுவினர் பங்கேற்பு


இந்தியாவில் 100 ஜி-20 மாநாடுகள்; 111 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரம் குழுவினர் பங்கேற்பு
x
தினத்தந்தி 18 April 2023 1:33 AM GMT (Updated: 18 April 2023 5:04 AM GMT)

இந்தியாவில் இதுவரை நடந்த 100 ஜி-20 மாநாடுகளில், 111 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுவினர் பங்கேற்று உள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடுகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், உறுப்பு நாடுகளை சேர்ந்த குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்தியாவின் சிறப்பு அழைப்பின் பேரில் பிற நாடுகளை சேர்ந்த குழுவினர்களும் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய தலைமையின் கீழான ஜி-20 மாநாட்டுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ச வர்தன் ஷிரிங்லா செய்தியாளர்களிடம் கூறும்போது, நம்முடைய தலைமையின் கீழ் 100 மாநாடுகளை இதுவரை நாம் நடத்தி உள்ளோம்.

இதில் நாட்டின் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என அனைத்து பகுதிகள் உள்பட இதுவரை 41 வெவ்வேறு நகரங்களில் இந்த கூட்டங்களை நாம் நடத்தி இருக்கிறோம்.

இந்திய தலைமையின் கீழான இந்த மாநாட்டு கூட்டங்களில் 111 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று உள்ளனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுவினரும் கூட்டங்களில் இதுவரை கலந்து கொண்டு உள்ளனர். அவற்றில் நல்ல முறையில் விவாதங்கள் நடந்துள்ளன என அவர் தெரிவித்து உள்ளார்.

வாரணாசி நகரில் தனது 100-வது ஜி-20 மாநாட்டை நடத்தி முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண் துறையை சார்ந்த தலைமை விஞ்ஞானிகளின் சந்திப்பு நடந்தது. தொடர்ந்து நாடு முழுவதும் 60 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


Next Story