ராமநகர், பீதரில் நடந்த விபத்தில் பெண்கள் உள்பட10 பேர் பரிதாப சாவு


ராமநகர், பீதரில் நடந்த விபத்தில் பெண்கள் உள்பட10 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநகர், பீதரில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் பெண்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூரு:-

6 பேர் சாவு

பெங்களூருவை சேர்ந்தவர்கள் நாகேஷ், புட்டராஜு, கோவிந்தா மற்றும் குமார். இவர்கள் உள்பட 7 பேர் காரில் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் மலை மாதேஸ்வரா கோவிலுக்கு சென்றுவிட்டு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்களது காரை ஜோதி லிங்கப்பா என்பவர் ஓட்டினார். அவர்கள், ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சாத்தனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பெங்களூருவில் இருந்து மைசூரு நோக்கி வந்த கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்சும், அவர்களின் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

மேலும் இடிபாடுகளில் சிக்கி காரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சாத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் விபத்துக்குள்ளான கார் மற்றும் பஸ்சை அங்கிருந்து அகற்றினர். இந்த விபத்தால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு விபத்து

இதேபோல், பீதரில் நடந்த மற்றொரு விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

பீதர் மாவட்டம் பசவகல்யாண் தாலுகா மன்னள்ளி கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரும், எதிரே வந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஒரு காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பசவகல்யாண் போலீசார் விரைந்து வந்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், பலியானவர்கள் மராட்டியத்தை சேர்ந்த பரிமா (வயது 35), சுனில் (35), பூஜா (17), அனுசுபாய் (65) என்பதும், அவர்கள் சுற்றுலாவுக்கு வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பசவகல்யாண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆக மொத்தம் ராமநகர், பீதரில் நடந்த 2 விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story