சிவமொக்காவில் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.40 ஆக நிர்ணயம்
In Sivamokka, the minimum fare for autos has been fixed at Rs.40
சிவமொக்கா:
கலெக்டர் ஆலோசனை
சிவமொக்கா நகரில் ஏராளமான ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். மேலும் ஆட்டோக்களுக்கு கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று சிவமொக்கா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செல்வமணி, ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் தொடர்பாக ஆட்டோ டிரைவர்கள், போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஆட்டோ உரிமையாளர்கள், டிரைவர்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
குறைந்தபட்ச கட்டணம் ரூ.40
இந்த கூட்டத்தில் சிவமொக்கா நகரில் ஓடும் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது, முதல் 2 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.20 வசூலிக்கலாம் என்றும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் நகரில் பல ஆட்டோக்கள் மீட்டர் பொருத்தாமலும், டிரைவர்களின் சுயவிவர பட்டியல் ெபாருத்தாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைத்து ஆட்டோக்களிலும் கட்டாயம் மீட்டர் மற்றும் டிரைவரின் சுயவிவர பட்டியல் பொருத்த வேண்டும் என்று கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டார்.
எச்சரிக்கை
மேலும் ஆட்டோக்களில் சரியாக மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதா, டிரைவரின் சுயவிவர பட்டியல் உள்ளதா என்பதை கண்காணிக்க கூடுதல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகும் ஆட்டோ டிரைவர்கள் மீட்டர், சுயவிவர பட்டியல் இல்லாமல் ஆட்டோ ஓட்டினால் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் செல்வமணி எச்சரித்துள்ளார்.
மேலும், பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.