கங்கையை சுத்தப்படுத்த ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதி: மத்திய மந்திரி
கங்கை மற்றும் அதன் துணை நதிகளை சுத்தப்படுத்த ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத்துறை மந்திரி தெரிவித்தார்.
புதுடெல்லி,
இமயமலையில் தோன்றி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் என பல்வேறு மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடும் இந்தியாவின் ஜீவநதி கங்கை. 2 ஆயிரத்து 525 கிலோமீட்டர் நீளம் கொண்ட கங்கா நதி வங்காளதேசத்தில் வழியாக பாய்ந்து இறுதியில் வங்க கடலில் கலக்கிறது.
இதற்கிடையில், கங்கை நதி மிகவும் மாசடைந்து வருவதால் அதை தூய்மைபடுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்காக, கங்கை தூய்மைபடுத்துவதற்கான தேசிய பணி என்ற துறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த துறையின் பிரதான நோக்கம் கங்கை நதியை தூய்மைபடுத்துவதாகும். 2014-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கங்கை நதியை தூய்மைபடுத்தும் பணிகள் தொடந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கங்கை மற்றும் அதன் துணை நதிகளை சுத்தப்படுத்த ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறும்போது,
பொருளாதார வளர்ச்சியின் ஆரம்பமே நமது நீர் வளமும் ஆற்றலும் ஆகும். "நமது இயற்கை வளங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் தேவையின் வரைபடம் ஒரே மாதிரியாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை, புவியியல் பரந்த தன்மை, நீர் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை கருத்தில் கொண்டு, நீர் மற்றும் பிற இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
கங்கை மற்றும் அதன் துணை நதிகளை சுத்தப்படுத்த ஏராளமான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் தூய்மை கங்கா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கங்கையை ஒட்டிய 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நதி தொடர்பான பிரச்சனைகள் குறித்து முறையான விவாதங்கள் நடைபெற்று வருவதுடன், சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.