‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிவுநீர் ஓடையில் அடைப்பு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேரூராட்சி அலுவலகம், மருத்துவமனை, போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள சந்திகிணறு தெரு, விநாயகர் சன்னதி தெரு பகுதியில் கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும், ஓடையில் உள்ள கழிவுகள் அள்ளப்பட்டு அதன் அருகில் பல நாட்களாக போடப்படுவதால், மீண்டும் அந்த கழிவுகள் ஓடையில் விழுகிறது. ஆகவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
ஆறுமுகம், நாங்குநேரி.
நூலகத்திற்கு புதிய கட்டிடம் வேண்டும்
ராதாபுரம் அரசு நூலகத்தில் 2 கட்டிடங்கள் இருந்தது. அதில் ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் பல ஆண்டுகளாக காணப்பட்டது. அந்த கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், அரசு பணி தேர்வுக்கு முயற்சி செய்யும் மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுகிறேன்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
சேறும், சகதியுமான சாலை
பாளையங்கோட்டை கோர்ட்டு எதிரே உள்ள காமராஜர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புக்கு தோண்டப்பட்ட குழாய்கள், தொட்டிகள் புதைக்கப்பட்டன. தோண்டி எடுத்த மண்ணை சமநிலையில் பரப்பி சரிவர மூடாத காரணத்தால் தெருக்களில் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக அந்த பகுதியில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.
சண்முகசுந்தரம், காமராஜர் நகர்.
ஆபத்தான மரம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை - சுரண்டை சாலையில் பெரியபிள்ளைவலசை விலக்கு அடுத்துள்ள மெயின் ரோட்டின் ஓரத்தில் ஆலமரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. அதாவது மரத்தின் அடிப்பகுதி தூர்ந்து காணப்படுவதால் எந்த நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. இலத்தூர், சுரண்டை, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலையாக இந்த பகுதி உள்ளது. ஆகவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி அபாய நிலையில் உள்ள அந்த மரத்தை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ராஜீவ்காந்தி, செங்கோட்டை.
சாய்ந்து இருக்கும் மின்கம்பம்
கடையம் எஸ்.பி.ஐ. வங்கி அருகில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் அருகில் ஆஸ்பத்திரி, பஸ் நிறுத்தம் உள்ளது. எப்போதும் ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆகும். எனவே, ஏதாவது விபரீதம் ஏற்படும் முன் சாய்ந்த நிலையில் இருக்கும் இந்த மின்கம்பத்தை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
திருக்குமரன், கடையம்.
பழுதடைந்த அரசு கட்டிடம்
ஆய்க்குடி அரசு ஆஸ்பத்திரி அருகில் பொதுப்பணித்துறையினரின் பயணியர் விடுதி கட்டிடம் ஒன்று பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே, இந்த கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சுப்பிரமணியன், ஆய்க்குடி.
சாலை சீரமைக்கப்படுமா?
சங்கரன்கோவில் தாலுகா குலசேகரமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது ஆண்டிநாடாரூர் கிராமம். இங்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும், இந்த வழியாக தான் பொதுமக்கள் பலரும் வயல்களுக்கு சென்று வருகிறார்கள். ஆகவே, அந்த சாலையை சீரமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஆரோக்கிய ரிஷன், ஆண்டிநாடாரூர்.
வாகன ஓட்டிகள் அவதி
நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆச்சிமடத்தில் இருந்து செய்துங்கநல்லூர் வரை உள்ள சாலையில் நடைபெற்று வரும் பணிகளால் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் சாலையும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
பெருமாள், கால்வாய்.
Related Tags :
Next Story