தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த அரிய வகை அணில் குட்டிகள்
தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை அணில் குட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு வாலிபர் தனது உடைமையில் சிறிய வகை கூடைக்குள் 9 அரிய வகை அணில் குட்டிகளை வைத்திருந்தார்.
இதை கண்ட சுங்க இலாகா அதிகாரிகள் வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். தாய்லாந்தில் இருந்து வளர்ப்பதற்காக அணில் குட்டிகளை வாங்கி வந்ததாக தெரிவித்தார். ஆனால், அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் எதுவுல் இல்லை.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அணில் குட்டிகளை பறிமுதல் செய்தனர். இந்த அணில் குட்டிகள் மூலம் நோய்க் தொற்று பரவும் ஆபத்து இருப்பதால், அதை மீண்டும் தாய்லாந்துக்கே திருப்பி அனுப்புவது தான் சரியாக இருக்கும் என்று மத்திய வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் கூறினா்.
அதற்கான நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அணில் குட்டிகளை கொண்டு வந்தவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை வெள்ளை முள்ளம் பன்றி மற்றும் குரங்கு குட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story