அடிப்படை வசதிகள் இல்லாத கும்பகோணம் புதிய பஸ் நிலையம்


அடிப்படை வசதிகள் இல்லாத கும்பகோணம் புதிய பஸ் நிலையம்
x
தினத்தந்தி 16 May 2022 1:22 AM IST (Updated: 16 May 2022 1:22 AM IST)
t-max-icont-min-icon

பூட்டியே கிடக்கும் கழிவறை, மழை பெய்தால் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர் என கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளே இல்லாத நிலை உள்ளது. எனவே இங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம்:
பூட்டியே கிடக்கும் கழிவறை, மழை பெய்தால் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர் என கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளே இல்லாத நிலை உள்ளது. எனவே இங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம்
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் கும்பகோணம் மாநகரமானது காவிரி, அரசலாறு என்ற 2 ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் நிறைய உள்ளன. கும்பகோணத்தை சுற்றிலும் நவக்கிரக கோவில்கள், புராதன கோவில்கள், பாடல்பெற்ற கோவில்கள் உள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையும் உள்ளது.
கும்பகோணம் என்றாலே மகாமகம் தான் நினைவுக்கு வரும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படி ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு ரெயில் போக்குவரத்தை போல் பஸ் போக்குவரத்தும் வசதியாக இருப்பதற்காக கும்பகோணத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
புதிய பஸ் நிலையம்
இந்த பஸ்கள் வந்து செல்வதற்கு வசதியாக கும்பகோணம் மாநகரின் மையப்பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை சென்னை, திருப்பதி, பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணத்தை சுற்றி உள்ள கோவில்களுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் கும்பகோணத்திற்கு வந்து செல்கின்றனர்.
கோவில்கள் மட்டுமின்றி கும்பகோணம் வெற்றிலைக்கும் மிகவும் பிரசித்தி பெற்றது. கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனம் பட்டுக்கு பெயர் பெற்றது. நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்கு, பூஜை சாமான்கள் சிறப்பு வாய்ந்தது. இவைகளை வாங்குவதற்காகவும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் நாள்தோறும் கும்பகோணம் வந்து செல்வார்கள்.
அடிப்படை வசதிகள்
இப்படி தினமும் ஏராளமானோர் வந்து செல்லக்கூடிய புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. பயணிகள் அமருவதற்காக இருக்கை வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. கூடுதல் இருக்கைகள் அமைத்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் தெரிவித்தனர்.
குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் அமரும் இடம் கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை செயல்பாட்டில் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு இப்படி யாருக்கும் பயனில்லாமல் இருக்கும் இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதும் பயணிகளின் எதிர்பார்ப்பாகும்..
பூட்டி கிடக்கும் கழிவறை
பஸ் நிலைய வளாகத்தில் கட்டண கழிவறைகள் உள்ளன. இவைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அணைக்கரை மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே கழிவறை கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடக்கிறது. 
இவற்றை பயன்பாட்டில் கொண்டு வர டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த கழிவறையை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீர்
இதேபோல் மழை பெய்தால் போதும் பஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் படும் அவதி கொஞ்சநஞ்சம் அல்ல. 
குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தண்ணீரில் இறங்கி நடந்து செல்வதற்குள் போதும்... போதும்... என்ற நிலையே உள்ளது. 
பஸ்கள் செல்லும் நேர விளம்பர பதாகை
மேலும் எந்ெதந்த ஊர்களுக்கு எந்ெதந்த பகுதியில் இருந்து பஸ்கள் புறப்படுகிறது என மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பர பதாகை இல்லை. இதனால் பயணிகள் தாங்கள் செல்லக்கூடிய பஸ்களை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. 
மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்களும் சில இடங்களில் காரை பெயர்ந்து விழுந்து, தற்காலிகமாக பூசப்பட்ட நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தை பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story