காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் பெண்ணை மீட்டுத்தரக்கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
நாட்டறம்பள்ளி போலீஸ்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். பெண்ணை மீட்டுத்தரக்கோரி உறவினர்கள் போலீஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி போலீஸ்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். பெண்ணை மீட்டுத்தரக்கோரி உறவினர்கள் போலீஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காதல் திருமணம்
ஜோலார்பேட்டையை அடுத்த திரியாலம் பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சூர்யா (வயது 21). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் நாட்டறம்பள்ளியை அடுத்த மகாத்மா காந்தி தெருவை சேர்ந்த அண்ணாமலை மகள் அபிலாஷா (21). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அபிலாஷாவின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 1-ந்் தேதி சூர்யாவும், அபிலாஷாவும் வீட்டை விட்டு வெளியேறி கோயம்புத்தூர் காந்திநகர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
இது குறித்து தகவலறிந்ததும் இருவரையும் வீட்டிற்கு வருமாறும், நாங்களே திருமணம் செய்து வைக்கிறோம் என்று அபிலாஷாவின் பெற்றோர் கூறி உள்ளனர். இதை நம்பி காதல் தம்பதிகள் இருவரும் நாட்டறம்பள்ளி பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அபிலாஷாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காதலர்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காதலர்கள் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
பெண் வீட்டார் மகளை எங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என கூறி போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. அதன் பிறகு இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பெண் மேஜர் என்பதால் அவர் விருப்பப்பட்டால் அழைத்து செல்லலாம் என தெரிவித்தனர்.
ஆனால் அபிலாஷா காதல் கணவருடன் செல்வதாக கூறினார். இதனால் அவருடைய பெற்றோர் அங்கிருந்துசென்று விட்டனர். காதல் ஜோடிக்கு அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story