திருவொற்றியூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நீச்சல் குளம் திறப்பு


திருவொற்றியூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நீச்சல் குளம் திறப்பு
x
தினத்தந்தி 2 May 2022 3:38 PM IST (Updated: 2 May 2022 3:38 PM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நீச்சல் குளம் சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து நீச்சல் குளத்தை புணரமைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகே காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சண்முகனார் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் நீச்சல் குளம் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வடசென்னையில் மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வந்த இந்த நீச்சல் குளம், கடந்த 2 ஆண்டுகளாக பழுதடைந்து செயல்படாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் நீச்சல் குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு நீச்சல் குளத்தை பார்வையிட்டு சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் நீச்சல் குளம் புதுப்பிக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டது. மேலும் குளியலறை மற்றும் கழிவறைகளும் சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து நீச்சல் குளத்தை புணரமைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. நீச்சல் குளத்தை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரத்துக்கு பெரியவர்களுக்கு 40 ரூபாயு‌ம், சிறியவர்களுக்கு 20 ரூபாயும் சலுகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சிறுவர்கள் நீச்சல் குளத்தில் உற்சாகமாக ‘டைவ்’ அடித்தும், ஆனந்தமாக துள்ளி குதித்தும் விளையாடி மகிழ்ந்தனர்.


Next Story