கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1000 பேருக்கு சிகிச்சை
இன்னுயிர் காப்போம் திட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அளவில் 2-வது இடம் பிடித்துள்ளதாகவும் டீன் பெருமிதத்துடன் கூறினார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை டீன் உஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாலை விபத்தில் காயமடைந்த 1,000 பேருக்கு இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் சிகிச்சை அளித்ததற்காக தமிழகத்தில் 2-வது இடத்தை கள்ளக்குறிச்சி பிடித்துள்ளது. மேலும் 843 பேருக்கு இலவசமாக சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு பல்துறை நவீன மற்றும் உயரிய சிறப்பு சிகிச்சைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் 700 பிரசவங்கள் நடக்கின்றன. குறைமாத பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் ஒரு கிலோ எடைக்கும் குறைவாக இருக்கும்போது இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். ஆனால் இதுபோன்ற 7 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டு, தற்போது நலமாக உள்ளது.
எலும்பு அறுவை சிகிச்சை பிரிவில் 4 பேருக்கு இடுப்பு எலும்பு மாற்று சிகிச்சையும், 4 பேருக்கு கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஸ்டோக், பக்கவாதம், திடீரென வாய் பேச முடியாத நிலை ஏற்பட்டவர்களுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மருந்து செலுத்தப்பட்டு நலம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மருத்துவ கண்காணிப்பாளர் நேரு, உள்புற மருத்துவ அலுவலர் அனுபமா, உதவி மருத்துவ அலுவலர்கள் பழமலை, பொற்செல்வி, குழந்தைகள் நல துறைத்தலைவர் கராமத், பொதுமருத்துவம் டாக்டர் மாரிமுத்து, அறுவை சிகிச்சை டாக்டர் மதுசூதனன், நோடல் அலுவலர் கணேஷ் ராஜா, எலும்பு அறுவை சிகிச்சை டாக்டர் ராஜ்கணேஷ் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story