ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை கோத்தர் இன மக்கள் முற்றுகை


ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை கோத்தர் இன மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 April 2022 7:09 PM IST (Updated: 21 April 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை கோத்தர் இன மக்கள் முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி

பிளஸ்-2 மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை கோத்தர் இன மக்கள் முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவியிடம் அத்துமீறல்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முத்தோரை பாலாடாவில் ஏகலைவா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் சுப்பிரமணி(வயது 58) என்பவர், பிளஸ்-2 மாணவியிடம் அத்துமீறியதாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக ஊட்டி புறநகர் மகளிர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் சுப்ரமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  மேலும் அவரை கைது செய்யக்கோரி கடந்த 19-ந் தேதி ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோத்தர் இன பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. 

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இதையடுத்து ஊட்டி புறநகர் மகளிர் போலீசார், ஏகலைவா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் நேற்று மாணவிகள், ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். 

தொடர்ந்து தனிப்படை அமைத்து, தலைமறைவான தலைமை ஆசிரியர் சுப்பிரமணியை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு கோத்தர் இன மக்கள் திரண்டு வந்து, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பேச்சுவார்த்தை

இதை அறிந்த ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, கோத்தர் இன மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், கலெக்டர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

பின்னர் கோத்தர் இன மக்களின் பிரதிநிதிகளான சந்திரன், சந்தானகிருஷ்ணன், கம்பட்டன் உள்பட சிலரை கலெக்டர் அம்ரித் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் தலைமை ஆசிரியரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த 2 நாட்களில் கைது செய்யப்படுவார். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் பேசி இருக்கிறேன் என்று கலெக்டர் தெரிவித்தார். 

சாலை மறியல்

இதை கோத்தர் இன மக்களிடம், பிரதிநிதிகள் தெரிவித்தனர். ஆனால் ஏற்க மறுத்த அவர்கள், கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து, ரவுண்டானா பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தொடர்ந்து போலீசார் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தையின் பலனாக 20 நிமிடங்கள் கழித்து சாலை மறியலை கைவிட்டனர். மேலும் அடுத்த 2 நாட்களில் தலைமை ஆசிரியரை கைது செய்யாவிட்டால், தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


Next Story