திருக்கோவிலூர் அருகே திரவுபதியம்மன் கோவில் தேரை தோளில் சுமந்து வலம் வந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் தரிசனம் செய்தனர்
திருக்கோவிலூர் அருகே திரவுபதியம்மன் கோவில் தேரை தோளில் சுமந்து பக்தர்கள் வலம் வந்தனர். இதில் ஆயிரகணக்கானவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அடுத்துள்ள வீரபாண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி யம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 3-ந்தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
விழாவில் சிகர திருவிழாவாக 2 நாட்கள் இங்கு தேர் திருவிழா நடைபெறும். அதிலும் தேரை பக்தர்கள் தங்களது தோளில் சுமந்து செல்வது மற்றொரு சிறப்பாக பார்க்கப்படுகிறது.
தீ மிதித்து நேர்த்திக்கடன்
அதன்படி முதல் நாள் தேர் திருவிழா கடந்த 17-ந்தேதி நடந்தது. இதில் தேரை பக்தர்கள் தங்களது தோளில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். அதாவது முதல் நாளில் 5 கி.மீ. தூரத்துக்கு தேரை தூக்கி சென்றனர். பின்னர் கிருஷ்ணன், அர்ஜூனன், திரவுபதி அம்மன் கரகம் ஆடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து, 18-ந்தேதி மீண்டும் தேர் திருவிழா நடந்து.
இதில் அர்ஜூனன் போர் புரிய மகாவிஷ்ணு தேர் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலையில் பக்தர்கள் தீ சட்டி எடுத்து, தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
விழாவில் வீரபாண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னின்று செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அரகண்டநல்லூர் போலீசார் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story