முதுமலை வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது


முதுமலை வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது
x
தினத்தந்தி 18 April 2022 6:31 PM IST (Updated: 18 April 2022 6:31 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் முதுமலை வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது.

கூடலூர்

கூடலூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் முதுமலை வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது.

கடும் வெயில்

கூடலூர், முதுமலை பகுதியில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் காணப்பட்டது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் வறண்டது. தொடர்ந்து வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு காட்டுயானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. 

மேலும் காட்டுத்தீ பரவும் அபாயம் காணப்பட்டது. தொடர்ந்து கூடலூர் பகுதியில் சில இடங்களில் காட்டுத் தீ பரவியது. கோடைமழை பெய்யாததால் விவசாய பயிர்களும் தண்ணீரின்றி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

பசுமைக்கு திரும்பியது

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கோடை மழை பெய்தது. அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மழைக்காலம்போல் குளிர்ந்த காலநிலை காணப்படுகிறது. 

மேலும் வனப்பகுதியில் புற்கள் முளைத்து பசுமை திரும்பியுள்ளது. ஆங்காங்கே உள்ள குளம், குட்டைகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

தீ பரவ வாய்ப்பு இல்லை

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கோடைமழை தாமதமாக பெய்தாலும் வறட்சியை போக்கக்கூடிய அளவுக்கு பெய்து உள்ளது. மேலும் வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பியுள்ளது. 

இதனால் காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து இருக்கிறது. மேலும் இந்த ஆண்டில் வனப்பகுதியில் தீ பரவும் வாய்ப்பு இல்லை. இது சற்று ஆறுதலை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story