சப்த கன்னிகள் கோவிலுக்கு பொருட்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று பொங்கல் வைத்த பெண்கள்
திரவுபதி அம்மன் கோயிலில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. சப்த கன்னிகள் கோவிலுக்கு பொருட்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தர்மராஜா கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அவ்வாறு தீ மிதி திருவிழா தொடங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக, திருத்தணி சந்து தெரு பகுதியை சேர்ந்த பெண்கள், கன்னிகாபுரம் பகுதியில் அமைந்துள்ள சப்தகன்னிகள் கோவிலில் பொங்கலிட்டு, அதன் பின்னர் தீ மிதி திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தீ மிதி திருவிழாவுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் விழா நடைபெறமால் இருந்தது.
இந்நிலையில், வருகிற 21-ந் தேதி திரவுபதி அம்மன் கோயிலில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, திருத்தணி சந்து தெரு பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த பகுதியிலிருந்து பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை மேட்டுத்தெரு, அரக்கோணம் சாலை, கன்னிகாபுரம் சாலை வழியாக மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சப்த கன்னிகள் கோவிலை அடைந்தனர். கோவிலில் உள்ள சுனை நீரைக்கொண்டு பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
Related Tags :
Next Story