ஊட்டியில் புகழ் பெற்ற குதிரை பந்தயம் தொடங்கியது
ஊட்டியில் புகழ் பெற்ற குதிரை பந்தயம் தொடங்கியது. இதை பார்வையிட 2 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஊட்டி
ஊட்டியில் புகழ் பெற்ற குதிரை பந்தயம் தொடங்கியது. இதை பார்வையிட 2 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கோடை சீசன்
நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடைசீசனின்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை கவரும் வகையில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதம் 14-ந் தேதி(தமிழ் புத்தாண்டு) முதல் ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. இது புகழ் பெற்றதும், பாரம்பரியமிக்கதும் ஆகும். இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.
குதிரை பந்தயம்
இந்த நிலையில் இந்த ஆண்டு 135-வது குதிரை பந்தயம் ஊட்டியில் இன்று தொடங்கியது. தமிழ் புத்தாண்டு கோப்பைக்கான பந்தயம் உள்பட 7 பந்தயங்கள் நடைபெற்றன. பந்தயங்களில் பங்கேற்ற குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக குதிரை பந்தயம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து குதிரை பந்தயம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் சில போட்டிகளே நடத்தப்பட்டது.
‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி
தற்போது குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பார்வையாளர்கள் குதிரை பந்தயத்தை நேரில் கண்டு ரசித்தனர். அப்போது செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். முதல் நாள் என்பதால் கவுன்ட்டர்கள், புக்கிங் சென்டர்கள் பரபரப்பாக காணப்பட்டன. குதிரை பந்தயத்தை காண மைதானத்துக்குள் வருபவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டது.
மேலும் பெங்களூரு, மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆன்லைன் மூலம் நேரடியாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நடக்கும் 114 பந்தயங்களுக்கு பரிசு தொகையாக ரூ.5.35 கோடி அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளையும்(வெள்ளிக்கிழமை) குதிரை பந்தயம் நடக்கிறது.
Related Tags :
Next Story