இலக்கு வைத்து செயல்பட்டால் இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் கோவையில் அண்ணாமலை பேட்டி


இலக்கு வைத்து செயல்பட்டால் இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் கோவையில் அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 14 April 2022 12:19 AM IST (Updated: 14 April 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

இலக்கு வைத்து செயல்பட்டால் இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழை கொண்டு வந்து விடலாம் என்று கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை

இலக்கு வைத்து செயல்பட்டால் இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழை கொண்டு வந்து விடலாம் என்று கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இணைப்பு மொழியாக தமிழ்

தமிழகத்தில் மத மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது குமரி மாவட்டம் கண்ணாட்டுவிளையில் மாணவி ஒருவர் மதமாற்றம் குறித்து புகார் அளித்து உள்ளார். 

இந்த பிரச்சினையை மாநில அரசு மூடி மறைக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தமிழக அரசின் பதிலை பொறுத்தே பா.ஜனதா அரசின் நடவடிக்கை இருக்கும். 

இந்தி மொழி பிரச்சினையில் உள்துறை மந்திரி அமித்ஷாவின் கருத்துடன் முரண்பாடு இல்லை. இந்தி எங்கேயும் திணிக்கப்படவில்லை. 20 ஆண்டுகாலம் இலக்கு வைத்து செயல்பட்டால், இந்தியாவில் இணைப்பு மொழியாக தமிழை கொண்டு வந்து விடலாம். 

இங்கு தமிழை வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர். அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் கடிதம் எழுதி, தமிழை பயிற்று மொழியாக்க தமிழக அரசு நிதி உதவி செய்ய முன்வந்தால் பா.ஜனதா உடன் இருக்கும். சர்வதேச அளவில் தமிழை வளர்க்க கமிட்டி அமைத்து செயல்பட வேண்டும்.

நீட் விவகாரம்

நீட் விவகாரத்தில் பல மாநிலங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதற்கு எத்தனை மாநிலங்கள் பதில் அளித்தன? இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து சுதந்தரத்தின் அடிப்படையில் தமிழன்னை படத்தை வெளியிட்டுள்ளதாக கருதுகிறோம். 

ஏப்ரல் மாதம் 14-ந் தேதியை சமத்துவ நாளாக தற்போது தான் தி.மு.க. சொல்லி இருக்கிறது. ஆனால் பா.ஜனதா அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக நீண்ட நாட்களாக கடைபிடித்து வருகிறது. 

பிரதமர் ேமாடி படம்

வருகிற 2026-ம் ஆண்டு தமிழகத்தில் 150 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜனதா பிடிக்கும். தமிழகத்தை சாராதவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்பதை வேண்டும் என்றால் ஏற்கிறோம். ஆனால் திராவிட இயக்கம்தான் தமிழகத்தை ஆளும் என்பதை ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் கோவை கோல்டு வின்ஸ் பகுதிக்கு சென்ற அண்ணாமலை, அங்குள்ள ஒரு ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் அருகே, பிரதமர் மோடியின்  படத்தையும் மாட்டி வைத்தார்.


Next Story