பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்
பாதை பிரச்சினை
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் உள்ள கலெக்டர் அறையின் அருகே நேற்று மதியம் பெண் ஒருவர் தீக்குளிக்க பாட்டிலில் மண்எண்ணெய் கொண்டு வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டில், தீப்பெட்டியை மல்லுக்கட்டி கைப்பற்றினர்.
பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் குன்னம் தாலுகா, ஒகளூர் நடுத்தெருவை சேர்ந்த பாண்டியன் மனைவி சரஸ்வதி (வயது 50) என்பது தெரியவந்தது. மேலும் அருவடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சரஸ்வதி குடும்பத்தினருக்கும், அவருடைய கொழுந்தனார் குடும்பத்தினருக்கும் இடையே பாதை பிரச்சினை இருந்து வந்துள்ளது.
வாடகை வீட்டிற்கு...
பாதை பிரச்சினை சம்பந்தமாக சரஸ்வதி மங்களமேடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணையின் முடிவில் சரஸ்வதி தனது வீட்டை காலி செய்துவிட்டு, வாடகை வீட்டிற்கு சென்று விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது தனது வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து வருவதற்கு அவரது கொழுந்தனார் பாதை விடாமல் மறித்து வருவதாகவும், தனது வீட்டில் உள்ள பொருட்களை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க மண்எண்ணெய்யுடன் வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சரஸ்வதியிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story