சித்திரை திருவிழா கொடி யேற்றம்
திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடி யேற்றம் நடந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ளது திரு உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவில். மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவில் அபூர்வ மரகத நடராஜர் சன்னதி ஒன்றும் அமைந்து உள்ளது. அதுபோல் ஆண்டுதோறும் இந்த கோவிலில் சித்திரை பெருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் திருஉத்தரகோசமங்கை கோவிலில் இந்த ஆண்டின் சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவானது வருகிற 17-ந் தேதி வரையிலும் 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று அம்மன் சன்னதி எதிரே உள்ள மண்டபத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த மங்களநாத சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல்அலுவலர் சரண்யா, அ.தி.மு.க கட்சியின் கிளை செயலாளர் நடராஜன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் 8-வது நாளான வருகிற 15-ந் தேதி வெள்ளிக் கிழமை அன்று சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-வது நாளான 16-ந் தேதி சனிக்கிழமை அன்று மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக 17-ந் தேதி அன்று தீர்த்த உற்சவத்துடன் திருவிழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான பரம்பரை தர்ம கர்த்தா ராணிபிரம்மகிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார் தலை மையில் திவான் மேற்பார்வையில் திருக்கோவில் பணியாளர்கள்செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story