முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்-கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்
முதுகு தண்டுவடம் பாதிப்பிற்குள்ளான 20 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
தர்மபுரி:
ஸ்கூட்டர்கள்
தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் திவ்யதர்சினி கலந்து கொண்டு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது;-
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக முகாம்கள் நடத்தப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகிறது.
சாய்தள வசதி
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சாய்தள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் இவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துறையின் சார்பில் கண் கண்ணாடி, காதொலி கருவி, கைப்பிடி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story