திராவிட இயக்கங்களின் கொள்கைகளை வளர்ப்பதற்கு உறைவிடமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் விளங்கியது


திராவிட இயக்கங்களின் கொள்கைகளை வளர்ப்பதற்கு உறைவிடமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் விளங்கியது
x
தினத்தந்தி 29 March 2022 12:49 AM IST (Updated: 29 March 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

திராவிட இயக்கங்களின் கொள்கைகளை வளர்ப்பதற்கு உறைவிடமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் விளங்கியது என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.

அண்ணாமலைநகர், 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நேற்று உயர்கல்வித்துறை அறக்கட்டளை ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் உழவர் தின விழா ஆகியவை நடைபெற்றது. இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் தலைமை தாங்கினார். 
பதிவாளர் (பொறுப்பு) சீதாராமன் வரவேற்றார். பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்து கொண்டு உயர்கல்வித்துறை அறக்கட்டளை ஊக்கத்தொகையை மாணவ- மாணவிகளுக்கு வழங்கி பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:- 

பேரறிஞர் அண்ணா பட்டமளிப்பு விழா பேருரையாற்றிய மேடை இந்த சாஸ்திரி அரங்கம். 1971-ம் ஆண்டில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கியது இந்த மேடை. 
அந்த அளவிற்கு இந்த மேடை புகழ் பெற்றது. திராவிட இயக்கங்களின் கொள்கைகளை வளர்ப்பதற்கு உறைவிடமாக விளங்கியது அண்ணாமலை பல்கலைக்கழகம். உயர் கல்வியில் பெண்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வி படிக்கும் போது மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் கொண்டுவந்துள்ளார். இவ்வாறு அவர் ேபசினார்.

சிகப்பி நெல்

 இதனை தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்துறை அறிமுகப்படுத்திய சிகப்பி நெல் விதைகளை விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். பின்னர் உழவர் தின சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 75 உறுப்பு கல்லூரிகளை இணைத்து அதற்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும்.
 விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார். 

வேளாண் கல்லூரி

.மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வாழ்த்தி பேசும்போது, கடலூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி ஒன்று அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

 விழாவில் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மதிவாணன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி, சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதவி மற்றும் முன்னேற்ற மைய இயக்குனர் தெய்வசிகாமணி, துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்யராஜ், சிதம்பரம் நகராட்சி தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி, செயல் அலுவலர் பாலமுருகன், சிதம்பரம் கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண் புல முதல்வர் சுந்தரவரதராஜன் நன்றி கூறினார்.

Next Story