பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
ஆவூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
ஆவூர்,
தேசிய குடற்புழு நீக்க திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக விராலிமலை ஒன்றியம், ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் லெட்சுமணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கும் 663 மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. அப்போது குடற்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் முருகேசன் பேசும்போது, குடற்புழுவினால் பசியின்மை, ரத்தசோகை, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
ஆகவே குடற்புழுநீக்க மாத்திரையை 6 மாதத்திற்கு ஒருமுறை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வாரம் ஒருமுறை சாப்பிடும் இரும்புசத்து மாத்திரையின் பயன்கள் குறித்தும் நலகல்வி வழங்கப்பட்டது. தொடர்ந்து 7 மாணவர்களுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story