ஊட்டியில் மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்
ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கோத்தர் இன மக்கள் இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். முதல் வகுப்புகள் தொடங்கியது.
ஊட்டி
ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கோத்தர் இன மக்கள் இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர் வகுப்புகள் தொடங்கியது.
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 12-ந் தேதி திறந்து வைத்தார்.
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வந்தது. கடந்த 24-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
இந்தநிலையில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது. கல்லூரியில் கட்டுமான பணி முடிவடையாததால் தற்காலிகமாக தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டது.
ஊட்டி மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்த மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வருகை தந்தனர். அவர்களது அசல் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது.
பின்னர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடல் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.
86 பேர் சேர்த்தனர்
இதுவரை 2021-2022-ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 86 மாணவர்கள் சேர்ந்தனர். புதன்கிழமை வரை கலந்தாய்வு நடக்கிறது. அவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து மாணவர்களுக்கு டாக்டர் சீருடை வழங்கப்பட்டது. இதனை அணிந்தபடி மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நீலகிரி 3 மாணவர்கள்
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி டீன் மனோகரி கூறும்போது, தேசிய மருத்துவ ஆணையம் 150 இடங்கள் வழங்கி அனுமதித்தது. இதில் 127 இடங்கள் தமிழகத்தில் இருந்து நிரப்பப்படுகிறது.
மீதமுள்ள 23 இடங்கள் அகில இந்திய கோட்டாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் 5 பேர் சேர்ந்தனர். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 10 பேர் சேர்ந்தனர். நீலகிரியை சேர்ந்த 3 மாணவிகள் சேர்ந்து உள்ளனர் என்றார்.
Related Tags :
Next Story