நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி உறுதி: சேலம் மீண்டும் தி.மு.க.வின் கோட்டையாக மாறும்-வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி உறுதி என்றும், சேலம் மீண்டும் தி.மு.க.வின் கோட்டையாக மாறும் என்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
சேலம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி உறுதி என்றும், சேலம் மீண்டும் தி.மு.க.வின் கோட்டையாக மாறும் என்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சி மற்றும் கருப்பூர், கன்னங்குறிச்சி, காடையாம்பட்டி, ஓமலூர் ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் அறிமுகம் கூட்டம் சேலம் 5 ரோட்டில் உள்ள ஜெயக்குமார் ரத்னவேல் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட பொறுப்பாளர்கள் டி.எம்.செல்வகணபதி (மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரூ.828 கோடியில் பணிகள்
கூட்டத்தில் தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து சுமார் 47 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 40 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டுறவுத்துறை சார்பில் சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 52 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.528 கோடி நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். மேலும், சேலத்தில் நடந்த அரசு விழாவில் ரூ.828 கோடியில் பல்வேறு பணிகளையும் தொடங்கி வைத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் தி.மு.க.வில் ஒரு எம்.எல்.ஏ. இருக்கிறார். ஆனால் இங்கு ஒட்டுமொத்த அமைச்சராகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி செய்து கொண்டிருக்கிறார். பிரசாரத்தின் போது உங்கள் பகுதியில் என்ன பணிகள் செய்ய வேண்டும் என்பதை கேட்டு மக்களிடம் ஓட்டு கேளுங்கள். அதை நாங்களும், மாவட்ட நிர்வாகமும் செய்து கொடுப்போம்.
தி.மு.க.வின் கோட்டையாக மாறும்
சேலம் மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் பணத்தை கொண்டு வெற்றி பெறலாம் என கருதுகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசும்போது, சேலம் அ.தி.மு.க. கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற பேசியுள்ளார். ஆனால் சேலம் மீண்டும் தி.மு.க.வின் கோட்டையாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சரிசமமாக நின்று போராடி வெற்றியை பெறுவது தி.மு.க.வுக்கு தெரியும். பணம் கொடுத்தால் ஓட்டுபோடுவார்கள் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் மக்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் பின்னால் உள்ளார்கள். இதனால் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும்.
கூட்டணி வெற்றி உறுதி
சேலம் மாவட்டத்தில் 8 இடங்களில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். அங்கு வந்திருந்த மக்களை பார்த்தபோது வெற்றி நமது பக்கம் இருப்பதை அறிய முடிந்தது. தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். தேர்தலில் நம் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
கூட்டத்தில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் மோகன் (இந்திய கம்யூனிஸ்டு), சண்முகராஜா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஆனந்தராஜ் (ம.தி.மு.க.), அன்சர்பாஷா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் நாவரசு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில துணை செயலாளர் லோகநாதன், தமிழக வாழ்வுரிமை கட்சி லோகநாதன், மனிதநேய மக்கள் கட்சி செய்யது முஸ்தபா உள்பட தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியின் போது மாற்று கட்சியினர் ஏராளமானவர்கள் கே.என்.நேரு முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
Related Tags :
Next Story