தனுஷ்கோடி கடற்கரையில் இறுதிக்கட்டத்தில் கலங்கரை விளக்க பணிகள்
தனுஷ்கோடி கடற்கரையில் 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த கலங்கரை விளக்க பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது.
ராமேசுவரம்,
தனுஷ்கோடி கடற்கரையில் 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த கலங்கரை விளக்க பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது.
ரூ.8 கோடியில் கலங்கரை விளக்கம்
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதி உள்ளது. அதுபோல் தனுஷ்கோடி பகுதியில் மீன்பிடித் தொழிலை நம்பி தனுஷ்கோடி பாலம், கம்பிப்பாடு ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர். புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரையில் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையின் சார்பில் ரூ.8 கோடி நிதியில் புதிதாக கலங்கரைவிளக்கம் கட்டும் பணியானது கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு மேலாக தனுஷ்கோடி பகுதியில் நடைபெற்று வரும் இந்த கலங்கரை விளக்கத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தனுஷ்கோடி பகுதியில் 50 மீட்டர் உயரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கலங்கரை விளக்கத்தின் உள்பகுதி வழியாக பார்வையாளர்கள் மேல் பகுதி வரை சென்றுவர வசதியாக லிப்ட் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இறுதிக்கட்டம்
மேலும் கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில் 18 கடல் மைல் தூரத்திற்கு கடலில் ஒளிவீசும் அளவிற்கு அதிக உயர் சக்தி கொண்ட மின் விளக்குகள் அமைக்கும் பணிகளும் தற்போது முடிவடைந்துள்ளன.
தொடர்ந்து கலங்கரை விளக்கத்துடன் இணைந்த கட்டிடத்தில் மின்அறை, பாதுகாவலர் அறை, மழைநீர் சேகரிப்பு பூங்கா உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபற்றி கலங்கரை விளக்க உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது.
தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் சேர்த்து மொத்தம் 24 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. நெல்லை மாவட்டம் கூத்தன்குழி என்ற ஊரிலும் கலங்கரை விளக்கம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல் தனுஷ்கோடி கடற்கரையில் கடந்த 2 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் கலங்கரை விளக்கத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் இந்த கலங்கரை விளக்கத்தில் பணிகள் முழுமையாக முடிவடைந்து விடும்.அதன் பின்னர் இந்த கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இந்த கலங்கரை விளக்கம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்றுவரும் மீனவர்களுக்கு கரை திரும்புவதற்கு வசதியாக வழிகாட்டியாகவும் இந்த கலங்கரை விளக்கம் இருக்கும். சூரிய ஒளி மின்சாரம் மூலமும் இந்த கலங்கரை விளக்கம் செயல்படும் வகையில் பணிகள் நடந்துள்ளன. விரைவில் இந்த கலங்கரை விளக்கம் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story