பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா


பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 3 Feb 2022 10:53 PM IST (Updated: 3 Feb 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வருகிற 15-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்குகிறது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வருகிற 15-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்குகிறது.

மாரியம்மன் கோவில்

பொள்ளாச்சி கடை வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் வெள்ளி தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். 

கடந்த ஆண்டு தேர்த்திருவிழா கொரோனா பாதிப்பு காரணமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு இருந்தாலும் ஊரடங்கில் தளர்வுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

இதையடுத்து பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வருகிற 15-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்குகிறது. 

கம்பத்துக்கு புனிதநீர்

இதை தொடர்ந்து 22-ந் தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன் கம்பம் நடப்படுகிறது. திருவிழா முடியும் வரை இந்த கம்பத்திற்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபடுவார்கள். 

அடுத்த மாதம் 1-ந் தேதி கம்பத்தில் கோவில் பூவோடு வைக்கப்படுகிறது.  இதை தொடர்ந்து 4-ந் தேதி முதல் விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து பூவோடு ஏந்தி கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 5-ந் தேதி காலை 10 மணிக்கு கோவிலில் கொடியேற்று விழா நடைபெறுகிறது.

தேர்த்திருவிழா

8-ந் தேதி இரவு அபிஷேகம் நடக்கிறது. 9-ந் தேதி காலை 6 மணிக்கு மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 

இதைதொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து வெள்ளித்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும். இந்த நாட்களில் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

10-ந்தேதி 2-ம் நாள் தேரும், 11-ந்தேதி 3-ம் நாள் தேர் வீதி உலா வந்து நிலைக்கு வருதல், அதை தொடர்ந்து பாரிவேட்டை, தெப்பத்தேர் விழா நடைபெறுகிறது. 

மஞ்சள் நீராடுதல்

12-ந் தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது. 

14-ந் தேதி இரவு 8 மணிக்கு மகாஅபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story