சின்னசேலம் பேரூராட்சியை கைப்பற்றப்போவது யார்


சின்னசேலம் பேரூராட்சியை கைப்பற்றப்போவது யார்
x
தினத்தந்தி 3 Feb 2022 10:25 PM IST (Updated: 3 Feb 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் பேரூராட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கும், சின்னசேலம் தாலுகாவுக்கும் உட்பட்டது சின்னசேலம் பேரூராட்சி. இந்த பேரூராட்சி கடந்த 1897-ம் ஆண்டு ஊராட்சியாக தொடங்கப்பட்டது. பின்னர் மக்கள் தொகையின் அடிப்படையில் 1970-ம் ஆண்டு தேர்வுநிலை பேரூராட்சி என தரம் உயர்த்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு செயல்பட்டுவந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சிறப்பு நிலை பேரூராட்சியாக அந்தஸ்து பெற்று இன்றுவரை செயல்பட்டு வருகிறது. 

அரிசி ஆலைகள்

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 ஆயிரத்து 106 மக்கள் தொகையும் தற்போது சுமார் 28 ஆயிரம் மக்கள்தொகையையும் கொண்டுள்ளது. சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சி விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட பகுதியாகும். அதனை சார்ந்து விளைவிக்கும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உண்ணும் உணவுக்கு ஆதாரமாக 50-க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் மூலம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் அரிசி ஏற்றுமதி ஆகிறது. 
இங்கு அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், 2 அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஒரு நிதிஉதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, 5 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், ஒரு நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, அரசு தொழிற்பயிற்சி நிலையம், துணை மின் நிலையம், தீயணைப்பு நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போக்குவரத்து பணிமனை, ஆவின் பால் குளிரூட்டும் நிலையம், ஒருங்கிணைந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், கால்நடை மருத்துவமனை, ஒழுங்குமுறை விற்பனை கூடம், சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் நிலையம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், ஊட்டச்சத்து மாவு தயாரிப்பு கூடம், ரயில்வே நிலையம், நிலவள வங்கி, தொடக்க வேளாண்மை  கூட்டுறவு வங்கி, அஞ்சல் அலுவலகம், 7 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், 5 அரசு மாணவ-மாணவிகள் தங்கி பயிலும் விடுதிகள், ஒரு தனியார் மகளிர் பொறியியல் கல்லூரி ஆகியவையும் உள்ளன.

பொது பிரிவினர்

கடந்த முறை சின்னசேலம் பேரூராட்சியில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த தேன்மொழி குணசேகரன் வெற்றி பெற்று பேரூராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தார். அதற்கு முன் 2006-ம் ஆண்டு தி.மு.க.வைச் சேர்ந்த மீனாட்சி ராஜபாண்டியன் வெற்றி பெற்று பேரூராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தார். தற்போது நடைபெறும் தேர்தலில் பேரூராட்சி தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 18 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும், 10-வது வார்டு ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கும் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர 2,3,5,12,13,14,15 ஆகிய 7 வார்டுகள் பெண்களுக்காகவும் 1,4,6,7,8,11,16,17 ஆகிய 7 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மக்களின் எதிர்பார்ப்புகள்

வளர்ந்து வரும் சின்னசேலத்தில் பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். நகர மருத்துவமனை உருவாக்க வேண்டும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க அம்சாகுளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அண்ணாநகர் பஸ்நிறுத்தம் வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அல்லது பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும். சாலையின்நடுவில் சென்டர் மீடியன் (தடுப்புசுவர்) அமைக்க வேண்டும், சாம்பல் கழிவுகள் மருத்துவ கழிவுகளை ஏரியில் கொட்டுவதை தடுக்க வேண்டும். பிரபலமாக இயங்கிவந்த வியாழன் வாரச்சந்தை கூடத்தை நவீன படுத்தி சுற்றுச் சுவர் அமைத்து பாதுகாக்கவேண்டும். மேலும் உழவர் சந்தை ஏற்படுத்த வேண்டும், மகளிர் கழிப்பறை வளாகங்களை சீரமைத்து பராமரிக்க வேண்டும். புதிய மனைப் பிரிவுகள் அமைக்கப்பட்ட இடத்தில் பேரூராட்சிக்கு பதிவு செய்து தரப்பட்ட இடங்களை தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க பூங்காக்கள், இளைஞர்கள் உடற்பயிற்சி மையம் அமைத்து பாதுகாக்கப்பட வேண்டும். ஊர் குளத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் ஏற்படுத்தி நடைப்பயிற்சி செல்ல வசதி செய்ய வேண்டும். தாலுகா அலுவலகம் முன்பு நிழற்குடை அமைத்து அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும், அனைத்து தெருக்களிலும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

கைப்பற்றப்போவது யார்?

சின்னசேலம் பேரூராட்சி தற்போது அ.தி.மு.க. வசம் உள்ளது இதை தக்கவைக்க அ.தி.மு.க. வினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே போல ஆளும் கட்சியான தி.மு.க.வும் சின்னசேலம் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற தயாராகியுள்ளது.

Next Story