நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம்
நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசையையொட்டி பத்ர தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தபோது எடுத்த படம்.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசையையொட்டி பத்ர தீப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி 3 நாட்களாக காலை, மாலை இரு வேளைகளும் சாமிக்கு சிறப்பு யாகசாலை பூஜைகளும், அதைத்தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ஏற்றப்படும் தங்க விளக்கு ஏற்றப்பட்டது.
நேற்று காலை சுவாமி சன்னதியில் யாகசாலை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் தங்க விளக்கில் இருந்து சுடர் எடுத்து வரப்பட்டு மகா நந்தி முன்பு 11 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்த நந்தி விளக்கு ஏற்றப்பட்டு பத்ர தீப விழா நடைபெற்றது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சன்னதிகளில் 10 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் கோவில் ஜொலித்தது.
இரவில் 63 நாயன்மார்கள், விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகர் சப்பரங்களிலும், நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story