புகழூர் நகராட்சி ஒரு கண்ணோட்டம்
புகழூர் நகராட்சி ஒரு கண்ணோட்டம்.
நொய்யல்
கரூர் மாவட்டம், புன்செய் புகழூர் நகராட்சியானது 33.01 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த நகராட்சி1935-ம் ஆண்டு முதல் சிறப்பு நிலை ஊராட்சியிலிருந்து பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாக இயங்க துவங்கியது.
வெற்றி பெற்றவர்கள்
கடந்த 1953-ம் ஆண்டு புன்செய்ப்புகழூர் பேரூராட்சி 2-ம் நிலை பேரூராட்சியானது முதல் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து இப்பேரூராட்சியானது 1976-ம் ஆண்டு முதல் சிறப்பு நிலை பேரூராட்சி என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. புஞ்சைபுகழூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட வரை சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்தது. இந்நிலையில் 1935-ம் ஆண்டு நடைபெற்ற பேரூராட்சி தேர்தலில் சுந்தர முதலியார் என்பவர் வெற்றிபெற்றார். 1941-ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் கருப்பண்ணபிள்ளை என்பவர் வெற்றி பெற்றார். 1953-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாரப்பகவுண்டர் என்பவர் வெற்றி பெற்றார். 1958-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராக்கியண்ணன் வெற்றி பெற்றார். 1963-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாரப்பகவுண்டர் வெற்றி பெற்றார். 1965-ம் ஆண்டு முருகையன் வெற்றி பெற்றார். 1970-ம் ஆண்டு முருகையன் மீண்டும் வெற்றி பெற்றார். செங்கோட்டுவேல் என்பவர் 1979 முதல் 1986 வரை தனி அலுவலராக பணியாற்றி வந்தார்.
1986-ம் ஆண்டு பழனியப்பன் வெற்றி பெற்றார். 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை காசிநாதன் என்பவர் தனி அலுவலராக பணியாற்றி வந்தார். 1996-ம் ஆண்டு முனுசாமி என்பவர் வெற்றி பெற்று 2001-ம் ஆண்டுவரை பதவியில் இருந்தார். அதன்பின் 2001-ம் ஆண்டு முனுசாமி மீண்டும் வெற்றி பெற்றார். 2006-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த கல்யாணி சாமிநாதன் வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த லலிதா விவேகானந்தன் வெற்றி பெற்றார். அதன்பின் தேர்தல் நடக்காததால் தொடர்ந்து தனி அலுவலர் பொறுப்பில் இருந்து வந்தார்.
புகழூர் நகராட்சி உதயம்
இந்நிலையில் 1985-ம் ஆண்டு புன்செய்ப்புகழூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் இருந்து 8.01 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவிலான பகுதியினை பிரித்து புதியதாக தமிழ்நாடு காகித ஆலை புகழூர் தேர்வு நிலை பேரூராட்சி பிரிக்கப்பட்டு இயங்கி வந்தது.
இந்நிலையில் 36 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 7.12.2021ம் தேதியன்று தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறையின் அரசாணை (நிலை) எண் 118 - ன்படி இறுதி ஒப்புதலுடன் புன்செய்ப்புகழூர் தேர்வு நிலை பேரூராட்சியுடன் தமிழ்நாடு காகித ஆலை புகழூர் பேரூராட்சியை மீண்டும் இணைக்கப்பட்டு
புதியதாக புகழூர் இரண்டாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புன்செய்புகழூர் தேர்வுநிலை பேரூராட்சியில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 23,408 ஆக இருந்தது. புஞ்சை புகழூர் பேரூராட்சியில் 18 வார்டுகளும், தமிழ்நாடு காகித ஆலை புகழூர் பேரூராட்சியில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 5,556 ஆக இருந்தது. இதில் 12 வார்டுகள் இருந்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைகணக்கெடுப்பின்படி இரு பேரூராட்சிகளிலும் சேர்ந்து 28,964 பேர் உள்ளனர். இரு பேரூராட்சி களையும் சேர்த்து மொத்தம் 30 வார்டுகளாக இருந்தது.
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வார்டு மறுவரையறைப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு இரு பேரூராட்சிகளிலும் இருந்த 30 வார்டுகளில் இருந்து வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து 24 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாக புகழூர் நகராட்சி உருவாக்கப்பட்டது.
புகழூர் நகராட்சி தற்போது 24 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியில் 2011-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கொடுப்பின்படி 28,964 ஆக இருந்தது. தற்போதைய தோராயமான மதிப்பீடான மக்கள் தொகையாக 37,363 ஆக உள்ளது. இதன் மொத்தப்பரப்பளவு 33.01 சதுர கிலோ மீட்டர் உள்ளது. புகளூர் நகராட்சியில் சுமார் 16 ஆயிரம் குடும்பங்கள் உள்ளனர். 2022-ன் கணக்கின்படி மொத்த வாக்காளர்கள் 26 ஆயிரத்து 379 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 12,462 பேரும், பெண் வாக்காளர்கள் 13,915 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 2 பேரும் உள்ளனர்.
புதிய பஸ் நிலையம்
புகழூர் நகராட்சி பகுதியில் புகழூர் ரெயில்வே நிலையம் அருகில் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனமும், அதன் அருகாமையில் மூலி மங்கலம் அருகே டி.என்.பி.எல். சிமெண்டு நிறுவனமும், புகழூர் செம்படாபாளையத்தில் தனியா சர்க்கரை ஆலையும் செயல்பட்டு வருகிறது. புகழூர் செய்தித்தாள் காகித ஆலை அருகே ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் முக்கியமான அனைத்து ரெயில்களும் நின்று செல்கின்றன. புகழூர் காவிரியாற்றில் ரூ.490 கோடி செலவில் கதவணை கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புகழூர் நகராட்சியில் புகழூர் தாலுகா அலுவலகம் உள்ளது.
புகழிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வகையில் ரோப்கார் திட்டம் செயல்படுத்த வேண்டும். போளூர் நகராட்சி பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கொண்டு வரவேண்டும். புதிதாக பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும்.
பொதுமக்கள் கோரிக்கை
நெடுந்தூரப் பஸ்கள் இப்பகுதியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். புகழூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும். காகித ஆலை புகழூர் பேரூராட்சி கட்டுப்பாட்டில் பேச்சிப்பாறை அருகே இருந்த மின்மயானம் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து செயலற்றுக் கிடக்கிறது. இதனை விரைந்து நடவடிக்கை எடுத்து சீரமைத்து செயல்பட செய்ய வேண்டும். புகழூர்தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் புகழூர் வாய்க்கால் தண்ணீரில் கலக்கிறது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத தண்ணீரில் விவசாயம் செய்து பாதிப்படைந்து வருகின்றனர். விபரித்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இவற்றை தடுக்க தொலைநோக்குப் பார்வையுடன் திட்டம் தயாரித்து கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைக்கின்றனர்.
புகழூர் நகராட்சி பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாகவும், தொழிற்சாலைகள் உள்ள பகுதியாகவும் உள்ளது. வேலாயுதம்பாளையத்தில் சமணர்களும், வைணவர்களும் போற்றிப் பாடிய பிரசித்தி பெற்றபுகழிமலை முருகன் கோவில் (ஆறுநாட்டார் மலை) உள்ளது. புகழூர் அருகில் காவிரி ஆற்றங்கரையின் தென்பகுதியிலுள்ள வேட்டமங்கலம், புகழியூர், தோட்டக்குறிச்சி, கடம்பன்குறிசி, வாங்கல், நெரூர் ஆகிய 6 கிராமங்களுக்கு புகழிமலை முருகன் அருள் புரிந்தமையால் ஆறுநாட்டார் மலை என்ற சிறப்பினைப் பெற்றதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story