வீரளூர் கிராமத்திற்கு சென்ற புரட்சி பாரதம் கட்சியினர் தடுத்து நிறுத்தம்.சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
சுடுகாட்டு பாதை பிரச்சினை தொடர்பாக வீரளூர் கிராமத்திற்கு 50 கார்களில் சென்ற புரட்சி பாரதம் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி
சுடுகாட்டு பாதை பிரச்சினை தொடர்பாக வீரளூர் கிராமத்திற்கு 50 கார்களில் சென்ற புரட்சி பாரதம் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சுடுகாட்டு பாதை பிரச்சினை
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த வீரளூர் ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்தவரின் உடலை எடுத்து செல்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது சம்பந்தமாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, கலசபாக்கம் தாசில்தார் ஜெகதீசன், அரசு அலுவலர்கள் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாநில மனித உரிமை ஆணையர் விசாரணையும் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் இருந்து விசாரணைக்கு வரஇருந்ததால் நேற்று மாலை வேலூர், திருப்பத்தூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கார்களில் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆரணி - ஆற்காடு நெடுஞ்சாலை வழியாக வீரளூர் செல்வதாக தகவல் கிடைத்தது.
தடுத்து நிறுத்தம்
அதைத்தொடர்ந்து டி.ஐ.ஜி. ஆனி விஜயா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு, புரட்சி பாரதம் கட்சியினர் வந்த காரை இரும்பேடு அருகே தடுத்து நிறுத்தினர். அப்போது புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட எங்கள் சமுதாய மக்களுக்கு ஆறுதல் கூற செல்கிறோம். இதுவரை மற்ற சமுதாய இயக்க நிர்வாகிகள் பலரும் சென்று சந்தித்து உள்ளார்கள், அவர்களை ஏன் தடுக்கவில்லை நாங்கள் சென்றால் மட்டும் தடுப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டனர்.
அதற்கு டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறுகையில் நாளை (இன்று) செவ்வாய்க்கிழமை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு வர உள்ளதால் நீங்கள் அங்கு செல்ல வேண்டாம். நாளை ஒருநாள் விட்டு நீங்களே தேதி குறிப்பிடுங்கள் நான் அனுமதிக்கிறேன் என கூறினார். இதனால் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, கோஷங்கள் எழுப்பினர்.
2 கார்களுக்கு அனுமதி
இதுகுறித்து சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ஒரு கார் மட்டும் செல்ல அனுமதிக்குமாறும், வேறு யாரையும் அனுப்ப வேண்டாம் என தெரிவித்ததின் பேரில் ஒரு காரில் 5 நபர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் 2 கார்கள் செல்ல அனுமதியுங்கள் என தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து 2 கார்கள் மட்டும் வீரளூர் செல்ல அனுமதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றகார்கள் திருப்பி அனுப்பப்பட்டது.
இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story