பாட்டில்களின் மூடியை திறந்து மதுவை திருடி விற்பனை செய்த 4 பேர் கைது
குடோனில் இருந்து சப்ளைக்கு கொண்டு செல்லும்போது, மதுபாட்டில்களின் மூடியை திறந்து மதுவை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
குடோனில் இருந்து சப்ளைக்கு கொண்டு செல்லும்போது, மதுபாட்டில்களின் மூடியை திறந்து மதுவை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
மதுரை விரகனூர் அணை பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் (வயது 26), டேவிட் துரை (29), சதீஷ்குமார் (30), ஆண்டார் கொட்டாரம் பகுதியை சேர்ந்த அஜய்குமார் (26) என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது, கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தது. அதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
மதுவை திருடி விற்றனர்
மதுரை அருகே சிலைமான் மணலூர் அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது. இந்த குடோனில் இவர்கள் 4 பேரும் லோடுமேன்களாக வேலை செய்து வந்துள்ளனர். இந்த குடோனில் இருந்து மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு தினமும் சரக்கு சப்ளை செய்யப்படும். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் 4 பேரும், தினமும், சரக்கு கொண்டு செல்லும்போது, மதுபாட்டில்களின் மூடியை திறந்து மதுவை திருடி அதற்கு பதிலாக தண்ணீர் கலந்து வைத்துள்ளனர்.
மேலும், திருடிய மதுவை ஊரடங்கு நாட்களில், மது கடைகள் திறக்காத நாட்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். அவ்வாறு விற்பனை செய்த சமயத்தில் தான் போலீசில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்த 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றனர்.
மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story