79 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை


79 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
x
தினத்தந்தி 22 Jan 2022 9:40 PM IST (Updated: 22 Jan 2022 9:40 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்டமாக 79 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்டமாக 79 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஏற்ப உள்ளாட்சித் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பணிகளில் முழுவீச்சில்யில் ஈடுபட்டு வருகின்றனர். 
தேர்தல் நடைமுறை பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் மாவட்ட காவல்துறையின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. 
இந்த முதல்கட்ட ஆய்வின்படி மாவட்டத்தில் 27 இடங்களில் மொத்தம் 79 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன. ராமநாதபுரத்தில் 16 வாக்குச் சாவடிகளும், ராமேசுவரம், பரமக்குடியில் தலா 6, கீழக் கரையில் 15, மண்டபத்தில் 10, தொண்டியில் 5, ஆர்.எஸ். மங்கலத்தில் 6, அபிராமத்தில் 4, முதுகுளத்தூர், கமுதி ஆகியவற்றில் தலா 3, கடலாடியில் 5 என மொத்தம் 79 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு உள்ளன.
கூடுதல் பாதுகாப்பு
மாவட்ட காவல்துறை தவிர மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை இரண்டையும் சேர்த்து அதன் அடிப்படையில் முக்கிய பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் அமைதி கூட்டங்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story