5 நாட்களுக்கு பிறகு சேலம் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி-ஏராளமானவர்கள் சாமி தரிசனம்
கொரோனா கட்டுப்பாடுகளால் 5 நாட்களுக்கு பிறகு சேலத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ஏராளமானவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சேலம்:
கொரோனா கட்டுப்பாடுகளால் 5 நாட்களுக்கு பிறகு சேலத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ஏராளமானவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தரிசனத்திற்கு தடை
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கடந்த 14-ந் தேதி (பொங்கல் தினம்) முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் நேரடி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவில்கள் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம்
இந்தநிலையில் கட்டுப்பாடுகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை முதல் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதேபோல் ராஜகணபதி கோவில், கோட்டை பெருமாள் கோவில், சுகவனேசுவரர் கோவில், குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவில், குமரகிரி தண்டாயுதபாணி கோவில், கந்தாஸ்ரமம் முருகன் கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், குகை காளியம்மன், மாரியம்மன் கோவில், அழகாபுரம் முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது.
5 நாட்களுக்கு பிறகு
இதில் ஏராளமான பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கோவிலுக்கு சென்று சாமியை நேரடி தரிசனம் செய்து வழிபட்டால் தான் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் சேலம் 4 ரோடு அருகே உள்ள குழந்தை ஏசு பேராலயம், அஸ்தம்பட்டி இம்மானுவேல் பேராலயம், ஜான்சன்பேட்டை அந்தோணியார் ஆலயம் உள்பட அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களும் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டு பிரார்த்தனை நடந்தது.
தாரமங்கலம்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் 5 நாட்களுக்கு பிறகு நேற்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story