தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை-கொரோனா பரவலால் கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்


தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை-கொரோனா பரவலால் கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 19 Jan 2022 2:49 AM IST (Updated: 19 Jan 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கொரோனா பரவலால் கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சேலம்:
சேலத்தில் தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கொரோனா பரவலால் கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தைப்பூச விழா
தைப்பூசத்தையொட்டி சேலத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்படி சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டன. காலை 6 மணிக்கு காவடி பழனியாண்டவருக்கு பால், சந்தனம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பழனியாண்டவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. 9 மணிக்கு வேண்டுதலை நிறைவேற்ற ஒரு சில பக்தர்கள் மட்டும் காவடி எடுத்து வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு தீர்த்தக்குடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது.
அழகாபுரம் முருகன் கோவில்
இதேபோன்று சேலம் அழகாபுரம் முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி முருகனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து முருகனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சேலம் குமரகிரி பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகன், வள்ளி, தெய்வானைக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சேலம் பெரமனூரில் உள்ள கந்தசாமி ஆறுமுகன் கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதேபோன்று சேலம் பாவடி கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், பட்டை கோவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்பட சேலம் மாநகரில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பக்தர்கள் ஏமாற்றம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தைப்பூசத்திருவிழாவிற்கு கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்து ஏற்கனவே அரசு உத்தரவிட்டப்பட்டது. இதையடுத்து சேலத்தில் முருகன் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஒரு சில கோவில்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். ஒரு சிலர் கோவிலின் வாசல் பகுதியில் நின்றபடி சாமியை கும்பிட்டு சென்றனர்.
தலைவாசல்
இளம்பிள்ளையை அடுத்த காக்காபாளையத்தில் முத்துகுமாரசாமி கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தலைவாசல் அருகே வடசென்னிமலை பாலசுப்பிரமணிசாமி கோவிலில் கொரோனா பரவலால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் வழக்கமான பூஜைகள் நடந்தன. சாமிக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு நடந்தது. பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் அடிவாரத்தில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர்.
எடப்பாடி
எடப்பாடியில் தைப்பூச காவடிகள் கட்டப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் வீதிகள் தோறும் சிறிய பழனி மலை போல் வடிவமைத்து காவடிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் எடப்பாடி நகரம் முழுவதும் உள்ள வீதிகள், சிறு சிறு பழனிமலை களாக காட்சியளித்தது. மேலும் எடப்பாடி நகரம் முழுவதும் வண்ண வண்ண தோரணங்கள் மற்றும் மின்விளக்கு அலங்காரங்களால் விழாக்கோலமாக காட்சி அளித்தது.

Next Story