தைப்பூச திருவிழா: கோவில்களில் நடை சாத்தப்பட்டதால் வாசலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்
தைப்பூச திருவிழாவில் கோவில்களில் நடை சாத்தப்பட்டிருந்ததால் வாசலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை:
கோவில்களில் நடை சாத்தல்
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் தைப்பூச திருவிழா நாளான நேற்று கோவில்களில் நடை சாத்தப்பட்டு இருந்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். முருகன் கோவில்களில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் அங்கிருந்த வளாகத்தில் தீபமேற்றி வழிபட்டனர்.
புதுக்கோட்டையில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மனோன்மணி அம்மன் கோவிலில் முருகன் சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
அரிமளம்
அரிமளம் ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சி தாஞ்சூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 20-ம் ஆண்டு தைப்பூச அன்னதான விழா நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு 9 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு பட்டு மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தாஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அரிமளம் பேரூராட்சி பகுதியில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தைப்பூச விழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தைப்பூச விழாவை முன்னிட்டு சிவன் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட முருகன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரிமளம் நகரத்தார் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
அறந்தாங்கி, திருவரங்குளம்
அறந்தாங்கி வடகரை முருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் வாசலில் வந்து தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
திருவரங்குளம் அருகே உள்ள திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
கந்தர்வகோட்டை செட்டியாகுளம் கரையில் அமைந்துள்ள முருகன் கோவில், வேம்பன்பட்டி பாலசுப்பிரமணியர்கோவில், தச்சங்குறிச்சி குகை முருகன்கோவில், கந்தர்வகோட்டை ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில், பழைய ஆதனக்கோட்டையில் அமைந்துள்ள முருகன் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள முருக பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆதனக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரண்மனை தெரு செல்லும் பாதையில் வடலூர் வள்ளலார் சுத்த சன்மார்க்க சமரச சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம் அன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். தற்போது தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த கோவில்களில் பக்தர்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதால் இங்கு நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் தனித்தனியே வந்து சபை முன்பு நின்று வள்ளலாரை வழிபட்டு செல்கின்றனர்.
Related Tags :
Next Story