முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 18 Jan 2022 10:06 PM IST (Updated: 18 Jan 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சிக்கல்:
தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. 
தைப்பூசம்
 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு முருகபெருமானுக்கு  பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவியப்பொருட்களை கொண்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகக் கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தோப்புத்துறை
இதேபோல கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர்கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு பால், திரவியங்கள், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
 தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் உள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் உள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.
கடலுக்கு பாலாபிஷேகம்
தைப்பூசத்தையொட்டி அக்கரைப்பேட்டை  கிழக்கத்திய முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து மீனவர்கள் தீச்சட்டி ஏந்தி வந்து கோவிலில்  சிறப்பு பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்களை காக்க வேண்டியும், மீன் வளம் பெருக வேண்டியும், முருகனுக்கு வங்கக்கடலில் பாலாபிஷேகம் செய்து படையலிட்டு மீனவர்கள் வழிபாடு நடத்தினர்.
வாணவேடிக்கை
 பின்னர் பூஜை செய்த பால், பழம் உள்ளிட்ட பிரசாதங்கள் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. விழாவையொட்டி அக்கரைப்பேட்டையில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. அதேபோல் கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் குடமுழுக்கு வருஷபூர்த்திவிழா நடந்தது. முன்னதாக காளியம்மனுக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
 நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள பழனி ஆண்டவருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி, இளநீர், தேன், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  நாகையில் உள்ள குமரன் கோவில், மஞ்சகொல்லை குமரன் கோவில், பொரவச்சேரி முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கொரோனா தட்டுப்பாடு காரணமாக  பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வாய்மேடு பழனியாண்டவர் கோவிலில் முருகனுக்கு பால், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம், திருநீறு உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி அங்கி அணிவிக்கப்பட்டு,  மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது

Next Story