முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கம்பம்:
முருகன் கோவில்களில் வழிபாடு
தைப்பூச திருநாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவில், வழிபாட்டு தலங்களை திறக்க அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கோவில்களின் நடை சாத்தப்பட்டது. இருப்பினும் கோவில்களில் மூலவர் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
அதன்படி கம்பம் சுருளிவேலப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு மஞ்சள், திரவியபொடி, பால், தயிர், இளநீர், பழங்கள், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுப்பிரமணியசுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பெரியகுளம், போடி
இதேபோல் கவுமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகன் சன்னதி, கம்பராயப்பெருமாள் கோவிலில் உள்ள சண்முகநாதர் சன்னதி, ஆதிசக்தி விநாயகர் கோவிலில் சுப்பிரமணியசாமி சன்னதி ஆகியவற்றில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பெரியகுளம் காளகஸ்தீசுவரர் கோவிலில் உள்ள முருகன், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. போடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தையொட்டி முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பால்குடம், முளைப்பாரி
கண்டமனூர் அருகே ஆத்தாங்கரைபட்டியில், கடந்த 3 நாட்களாக தைப்பூசத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழாவின் ஒரு பகுதியாக, 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று பால்குடம் எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று முருகன் சிலை மீது ஊற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். இதேபோல மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில் கண்டமனூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி 3 நாட்களாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை, ஆத்தாங்கரைப்பட்டி திருவிழா கமிட்டியினர் செய்தனர்.
வழிபாட்டுதலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், அனைத்து கோவில்களிலும் அதிகாலையிலேயே முருக பெருமானுக்கு அர்ச்சகர்கள் அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்களை செய்து முடித்து கோவில் நடைகளை மூடினர். இதனால் முருகனை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story