கிருஷ்ணகிரியில் ரூ.339 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி-நாளை மோடி திறந்து வைக்கிறார்


கிருஷ்ணகிரியில் ரூ.339 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி-நாளை மோடி திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 11 Jan 2022 5:04 PM GMT (Updated: 11 Jan 2022 5:04 PM GMT)

கிருஷ்ணகிரியில் ரூ.339 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடத்தை, பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலமாக திறந்து வைக்கிறார்

குருபரப்பள்ளி:
மருத்துவக்கல்லூரி
கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் 46.03 ஏக்கர் பரப்பளவில் ரூ.338 கோடியே 95 லட்சத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.
புதுடெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதற்காக சென்னையில் நடக்கும் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன் கூறியதாவது:-
கட்டுமான பணிகள் நிறைவு
கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் 700 படுக்கை வசதிகள், 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கையுடன் கூடிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி கட்டிடம் 26 ஆயிரத்து 815 சதுர மீட்டரிலும், மருத்துவமனை கட்டிடம் 24 ஆயிரத்து 904.50 சதுர மீட்டரிலும், குடியிருப்பு மற்றும் மாணவ, மாணவிகள் விடுதிகள் 28 ஆயிரத்து 63 சதுர மீட்டர் இடத்திலும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் மத்திய அரசு நிதி தொகையாக ரூ.195 கோடியும், மாநில அரசின் நிதியாக ரூ.143.95 கோடியும் ஒதுக்கப்பட்டு கட்டிட பணிகள் முடிந்துள்ளன. நாளை (அதாவது இன்று) நடைபெறும் திறப்பு விழாவில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, அசோக்குமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story