கருப்பூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே தள்ளுமுள்ளு


கருப்பூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 5 Jan 2022 2:49 AM IST (Updated: 5 Jan 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

கருப்பூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே தள்ளுமுள்ளு

கருப்பூர்:-
கருப்பூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கூட்டுறவு கடன் சங்கம்
கருப்பூரில் செயல்பட்டு வரும் கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்அ.தி.மு.க.வை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் சங்க தலைவர் கோவிந்தசாமி, கருப்பூர் பேரூராட்சி 15-வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடுகளை செய்தார்.  அதே நேரத்தில் தி.மு.க. சார்பில் நகர செயலாளர் லோகநாதன் பந்தல் அமைத்து பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்திருந்தார். 
இந்த நிலையில் காலை 9.30 மணி அளவில் அ.தி.மு.க.வை சேர்ந்த மணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல், ஆகியோர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைப்பதற்காக கருப்பூர் கூட்டுறவு சங்க வளாகத்திற்கு வந்தனர். இதையறிந்த அ.தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க.வினர் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.  தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தள்ளுமுள்ளு
காலை 10 மணி அளவில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்காக மணி எம்.எல்.ஏ. கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு செல்ல முயன்றார்.  அப்போது போலீசார் அவரை உள்ளே செல்ல விடாமல் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினர் இதனால் அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் தி.மு.க.வினர் அவரை வெளியே போகச் சொல்லுங்கள்  என கோஷம் எழுப்பினர். இதனால் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையறிந்த சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன், கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பழனிசாமி மற்றும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிமை உள்ளது
அப்போது மணி எம்.எல்.ஏ. கூறும் போது, ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருப்பூர் கூட்டுறவு சங்க வளாகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்க எனக்கு உரிமை உள்ளது. ஆனால் தி.மு.க.வினர் எனது தொகுதி மக்களுக்கு நன்மை செய்யவிடாமல் ஜனநாயகத்திற்கு விரோதமாக நடந்து கொள்கிறார்கள். அதற்கு போலீசார், வட்ட வழங்கல் அதிகாரிகள் துணை போகிறார்கள் . இது கண்டிக்கத்தக்கது. இது குறித்து சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்படும் என்றார். தி.மு.க. நகர செயலாளர் லோகநாதன் கூறும் போது, தற்போது நடப்பது தி.மு.க ஆட்சி. இதனால் எங்கள் மாவட்டச் செயலாளரும், வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அ.தி.மு.க.வினர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தடுத்தனர் என்றார்.
பரபரப்பு
தொடர்ந்து போலீசார்மதியம் 2 மணிக்கு பிறகு வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் அதிகாரிகள் பொங்கல் தொகுப்பு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்க உள்ளனர். அதனால் இரு கட்சியினரும் கலைந்து செல்லுங்கள் என கூறினர். அதன் பின்னர்அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் மாலை 3 மணி அளவில்வக்கீல் ராஜேந்திரன்எம்.எல்.ஏ. ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
இந்த சம்பவத்தால் கருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story