அனுமன் ஜெயந்தி விழா ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


அனுமன் ஜெயந்தி விழா ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 2 Jan 2022 10:05 PM IST (Updated: 2 Jan 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தி விழா 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சுதர்ஷன ஹோமம் ஆகியவை நடந்தது. வெள்ளிக்கவச அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திர சாமிகள் கோவிலில், அனுமன் ஜெயந்தியையொட்டி காலை சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து சுதர்ஷன ஹோமமும், மங்களாரத்தியும், நடந்தது. ஆஞ்சநேயர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்கள் சாமி தரிசனம் 
கிருஷ்ணகிரி கிருஷ்ணதேவராயர் மலை அடிவாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சாமிக்கு கலச அபிஷேகம் நடந்தது. பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோவிலில் ஆஞ்நேயர் உற்சவம் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதேபோல ராசுவீதி அபய ஆஞ்சநேயர் கோவில், போகனப்பள்ளி பக்த ஆஞ்சநேயர் கோவில், பர்கூர் மல்லப்பாடி வீர ஆஞ்சேநயர் கோவில், கே.ஆர்.பி. அணை ஆஞ்நேயர் கோவில், எலுமிச்சங்கிரி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் என மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஓசூர்
அனுமன் ஜெயந்தியையொட்டி ஓசூர் அருகே டி.வி.எஸ். நகர் அம்பாள் நகரிலுள்ள பக்த ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்ம கோவில், கொத்தூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. எண்ணெய் சிகைக்காய், பால், தயிர், மஞ்சள், திரவியம் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 
இதேபோல், ஓசூர்-ராயக்கோட்டை ரோடு சர்க்கிளில் உள்ள ஸ்ரீ பண்ட ஆஞ்சநேயர் சாமி கோவில், பாகலூர் ரோடு சர்க்கிள் மற்றும் ராம் நகர் கோட்டை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும், அனுமன் ஜெயந்தியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பர்கூர்
பர்கூர் அருகே சின்ன காரகுப்பம் கிராமத்தில் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாக பூஜை, பால்குட ஊர்வலம், ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பின்னர் ஆஞ்சநேயர் விஸ்வரூப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story