ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை


ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
x
தினத்தந்தி 1 Jan 2022 4:55 PM GMT (Updated: 1 Jan 2022 4:55 PM GMT)

ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

பொள்ளாச்சி

ஒமைக்ரான் பரவல் எதிரொலி காரணமாக ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் அணை மற்றும் பூங்கா அமைந்துள்ளது. இங்கு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

புத்தாண்டுக்கு வழக்கத்தைவிட அதிகமாக கூட்டம் இருக்கும். இவர்கள் அணையின் இயற்கை அழகை ரசித்துவிட்டு, பின்னர் அருகில் உள்ள பூங்காவிற்கு குடும்பத்துடன் சென்று பொழுதை கழித்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாலும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அரசு தடை விதித்துள்ளது.

இதன்படி ஒமைக்ரான் பரவலை தடுக்க ஆழியாறு அணை, பூங்கா மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நேற்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 
 
போலீசார் பாதுகாப்பு

சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் ஆழியாறு அணைக்கு செல்லும் வழியில் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தது.

 சுற்றுலா பயணிகள் யாரும் அத்துமீறி நுழைவதை தடுக்கும் வகையில், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இதேபோல புத்தாண்டையொட்டி ஆழியாறு தடுப்பணையிலும் குளிக்க ஏராளமானவர்கள் வருவார்கள். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் ஆழம் தெரியாமல் தடுப்பணையில் இறங்கி குளிக்கும்போது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. 

இதனை தடுக்கும் வகையிலும், கொரோனா பரவலை தடுக்கவும் ஆழியாறு தடுப்பணையில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தடுப்பணைக்கு குளிக்க வந்தவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

Next Story