வெளிநாட்டில் இருந்து ஒமைக்ரான் அறிகுறியுடன் வந்த முதியவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை


வெளிநாட்டில் இருந்து ஒமைக்ரான் அறிகுறியுடன் வந்த முதியவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 29 Dec 2021 3:11 AM IST (Updated: 29 Dec 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இருந்து ஒமைக்ரான் அறிகுறியுடன் வந்த முதியவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்:
வெளிநாட்டில் இருந்து ஒமைக்ரான் அறிகுறியுடன் வந்த முதியவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதிய வைரஸ்
கொரோனா என்ற வைரஸ் நோயால் நாடு முழுவதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்த வைரஸ் குறைந்து வரும் நிலையில் சிறிது நிம்மதியடைந்த நேரத்தில் தற்போது இந்தியா முழுவதும் உள்ள மக்களை ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் மிகவும் பயமுறுத்தி வருகிறது.
இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.  கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து சேலத்துக்கு வந்த இளம்பெண் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான்சானியா நாட்டில் இருந்து சேலத்துக்கு வந்த 61 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். 
இந்த நிலையில் அவர் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஒமைக்ரான் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ரத்த மாதிரிகள்
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் கேட்ட போது, தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட முதியவருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனால் அவரது ரத்த மாதிரிகள் எடுத்து சென்னைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. பரிசோதனை முடிவில் தான் அவருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா? என்பது தெரியவரும். எனினும் அவருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story