ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் போன கத்தாழை மீன்
நாகையில், மீனவர் வலையில் சிக்கிய மருத்துவ குணம் வாய்ந்த கத்தாழை மீன் ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
நாகப்பட்டினம்:
நாகையில், மீனவர் வலையில் சிக்கிய மருத்துவ குணம் வாய்ந்த கத்தாழை மீன் ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
மீனவரின் வலையில் சிக்கிய கத்தாழை மீன்
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
நேற்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய ஜீவா என்ற மீனவர் வலையில் மருத்துவ குணம் வாய்ந்ததும், தங்கத்தை போன்று விலை மதிக்க கூடியதுமான கூறல் மீன் எனப்படும் கத்தாழை மீன் ஒன்று சிக்கியது.
ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம்போனது
இது குறித்த தகவல் அறிந்த வியாபாரிகள் காலையில் இருந்தே கத்தாழை மீனை வாங்க நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். 25 கிலோ எடை கொண்ட அந்த கத்தாழை மீன் ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:-
கோடியக்கரைக்கு தென்கிழக்கே கற்றாழை மீன்கள் கிடைக்கும். மீனவர்கள் வலையில் மிகவும் அரிதாக இந்த மீன் சிக்கும். இந்த வகை மீன்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். கத்தாழை மீன்களின் அடி வயிற்றில் நெட்டி என்ற காற்றுப்பை இருக்கும். ஒரு மீனில் 50 கிராம் முதல் 100 கிராம் வரை இந்த நெட்டி இருக்கும். இந்த மீன்கள், நெட்டி மூலம் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலியை எழுப்பும்.
பேரதிர்ஷ்டம்
இந்த நெட்டி ஒயின் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆண்மை குறைவுக்கும் இந்த நெட்டி மூலம் மருந்து தயாரிக்கப்படுகிறது.
கத்தாழை மீன் இறைச்சி கிலோ ரூ.500-க்கு விற்றாலும், அதில் இருக்கும் நெட்டிக்குதான் விலை அதிகம். எனவே இந்த வகையான மீன்கள் சிக்குவது பேரதிர்ஷ்டம் என்றனர்.
Related Tags :
Next Story