பழனி குளத்து ரவுண்டானாவில் வேல் சிலை உடைப்பு; இந்து அமைப்பினர் போராட்டம்
பழனியில் குளத்து ரவுண்டானாவில் உள்ள வேல் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி:
உலக புகழ்பெற்ற ஆன்மிக தலமான பழனியில், பஸ் நிலையம் அருகே குளத்துரோடு ரவுண்டானாவில் கிரானைட் கற்களால் ஆன வேல் சிலை உள்ளது. இந்த சிலைக்கு தினமும் பக்தர்கள் மாலை அணிவிப்பர். மேலும் பழனியின் அடையாளமாக இது விளங்குகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் மர்மநபர் திடீரென்று குளத்து ரவுண்டானாவில் ஏறி அதில் உள்ள வேல் சிலையை கையால் தாக்கி உடைத்தார். இதில் அது உடைந்து கீழே விழுந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்து கடைக்காரர்கள், பொதுமக்கள் ஓடி வந்தனர். அப்போது சிலையை உடைத்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அந்த நபரை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையே வேல் சிலை உடைக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியது. மேலும் பொதுமக்கள், பக்தர்கள், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் குளத்து ரவுண்டானா பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உடைக்கப்பட்ட சிலையை சீரமைத்து நாளை (அதாவது இன்று) மீண்டும் அதே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள், பக்தர்கள், இந்து அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் சிலையை உடைத்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story